February 14, 2017 தண்டோரா குழு
தமிழகத்தில் ஆட்சி அமைக்க தனக்கு வாய்ப்பு அளிக்கும்படி அதிமுக சட்டக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிம் உரிமை கோரினார். அது தொடர்பான கடிதத்தை ஆளுநர் வித்யாசாகரிம் செவ்வாய்க்கிழமை மாலை அவர் அளித்தார்.எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் விசுவாசி என்பது குறிப்பிடத் தக்கது.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கான சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து கூவத்தூரில் நடைபெற்ற சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் அதிமுக சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தரப்பால் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்க அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான 12 பேர் கொண்ட குழு கூவத்தூரிலிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்றது. ஆளுநரை மாலை 5.30 மணிக்கு சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்கள் ஜெயகுமார், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் ராஜலட்சுமி, சரோஜா, தளவாய் சுந்தரம், செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் சசிகலாவின் உறவினரும் முன்னாள் எம்பியுமான டி.டி.வி. தினகரனும் சென்றனர்.
ஆளுநர் மாளிகைக்குச் சென்று வித்யாசாகர் ராவைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தமக்கு அதிமுகவின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தன்னைச் சட்டப் பேரவை அதிமுக தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறினார். அதையடுத்து பெரும்பாலான அதிமுக கட்சி உறுப்பினர்கள் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தையும் ஆளுநரிடம் அளித்து ஆட்சியமைக்க தன்னை அழைக்கும்படி உரிமை கோரினார்.
ஆளுநருடனான அவரது சந்திப்பு ஐந்து நிமிடம் நீடித்தது.