April 17, 2023
தண்டோரா குழு
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்துவதற்கும் ஓட்டுவதற்கும் இதர ஆட்டோ ஓட்டுநர்கள் ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் தடுப்பதாக கூறி நான்கு ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஏற்கனவே இது குறித்து ஆர்டிஓ விடமும், துடியலூர் காவல் துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருமுறை மனு அளித்தனர்.இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் இரண்டாவது முறையாக கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயன்றனர். பிறகு காவல்துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர்.
தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தும் இதுவரை தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் அப்பகுதியில் தொடர்ந்து தங்களை ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் ஆட்டோ ஓட்டுவதற்கு அங்குள்ளவர்கள் தடுப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.