September 23, 2021 தண்டோரா குழு
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கோவையில் உள்ள ஆதியோகி முன்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (செப்.23) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பருவ பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்துடன் இருப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மக்களுக்கு எளிதில் புரியும் விதமாக சிலம்பாட்டம், பழங்குடியினர் நடனம் போன்ற நடனங்கள் மூலமாக சிறுதானியங்களின் சிறப்புகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது.
குறிப்பாக, இரத்த சோகையை தடுக்கும் விதமாக, முருங்கை கீரை, பசலை கீரை, பேரீச்சம் பழம் போன்ற இரும்பு சத்துமிக்க உணவுகளை உணவில் சேர்த்து கொள்வது, உடலுக்கு அனைத்து சத்துக்கள் சரிவிகிதமாக கிடைக்கும் விதமாக நம் உணவை வடிவமைத்து கொள்வது போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அத்துடன், குழந்தை பிறந்ததில் இருந்து 1,000 நாட்கள் வரை குழந்தையின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், கை கழுவுதல் போன்ற சுகாதார வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தொண்டாமுத்தூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.ஜோதி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.