March 16, 2023 தண்டோரா குழு
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையொப்பம் இடாமல் இருந்து வரும் நிலையில் ஆளுநருக்கு பல்வேறு கட்சிகள் அமைப்புகள் கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆளுநருக்கு இந்த விளையாட்டால் உயிரிழந்தவர்களை நினைவுப்படுத்துகின்ற வகையில் சாம்பல் அனுப்பும் நூதன போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சாம்பலை அனுப்புவதற்காக தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர். அப்போது ஆளுநருக்கு எதிரான கண்டன பதாகைகள், ஆளுநர் புகைப்படம் பொறித்த மாதிரி ரம்மி சீட்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அந்த மாதிரி ரம்மி சீட்டுகளை கிழித்தெரிந்தனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது
இதில் செய்தியாளர்களை சந்தித்த தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற பல்வேறு மக்கள் நலன் மசோதாக்களை நிறைவேற்றாமல் தமிழக ஆளுநர் புறக்கணித்து தாமதப்படுத்தி வருவதாகவும் இறுதியில் தமிழ்நாடு அரசிற்கு அதிகாரம் இல்லை என கூறி வருவதாகவும் தெரிவித்தார். அப்படிப்பட்ட ஒரு மசோதாவான ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்கின்ற மசோதாவை நிறைவேற்றாமல் ஆறு மாத காலம் கிடப்பில் போட்டுவிட்டு இறுதியாக தமிழ்நாடு அரசிற்கு அதற்கு அதிகாரம் இல்லை என்ற கருத்தை ஆளுநர் பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், ஆளுநருக்கு தான் இந்த ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு மனமில்லை என தெரிவித்தார்.
மேலும் ஆன்லைன் ரம்மி நிறுவனத்தினரிடம் ஆளுநர் ஆலோசனை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தமிழகத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்த அவர் இதனை ஆளுநருக்கு உணர்த்துகின்ற வகையிலும் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியார் திராவிட கழகம் ஆளுநருக்கு சாம்பல் அனுப்புகின்ற போராட்டத்தை நடத்துவதாக தெரிவித்தார்.