December 22, 2016 தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரது வீட்டின் மீது தலிபான் பயங்கரவாதிகள் புதன்கிழமை (டிசம்பர் 21) திடீர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மிர் வாலியின் வீடு ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ளது.
சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் இருந்தாரா என்று தெரியவில்லை.
ஆனால், தலிபான் வெளியிட்ட அறிக்கையில், “பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தைச் சீர்குலைக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலின்போது, வீட்டில் இருந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் மிர் வாலியின் வீட்டில் வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவருடைய வீட்டைச் சுற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
2௦௦1ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான ராணுவ நடவடிக்கை நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ராணுவ நடவடிக்கைக்காக பல லட்சம் கோடி டாலர்கள் செலவிடப்பட்டன.
எனினும், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தான் படைகள் தீவிரவாதிகளை ஒடுக்க இன்னும் பாடுபட்டு வருகிறது.