June 9, 2017 தண்டோரா குழு
ஆப்ரிக்காவில் மண்டையில் தங்கம் இருக்கும் என்ற புரளியால், வழுக்கை தலை ஆண்களை குறி வைத்த கும்பல் ஒன்று கொலை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாட்டில் போதிய கல்வி அறிவு இல்லாததால், மக்களிடையே அதிக மூடநம்பிக்கை உள்ளது. இந்நிலையில், மிலாங்கே மாவட்டத்தில் வழுக்கை தலை ஆண்களின் மண்டை ஓட்டில் தங்கம் இருக்கு என்று யாரோ கிளப்பிய புரளியால், கடந்த ஒரு வாரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மொசாம்பிக் போலீஸ் கமாண்டர் கூறுகையில்,
“மூடநம்பிக்கை மற்றும் கலாச்சாரம் தான் இந்த கொலைகளுக்கு முக்கிய காரணம். வழுக்கை தலை உள்ளவர்கள் பணக்காரர்கள் என்று உள்ளூர் மக்கள் நினைக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமான 2௦ வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, வழுக்கை தலையுடைய ஆண்கள் அதிகம் வெளியே செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துளோம்” என்று கூறினார்.
உள்ளூர் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
“இறந்துப்போன மூவரில் ஒருவருடைய தலை துண்டிக்கப்பட்டு, அவருடைய உடல் உறுப்புக்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாட்டின் டான்சானியா மற்றும் மலவி ஆகிய இடங்களில் செல்வந்தர்களின் செல்வத்தை அதிகரிக்க நடைபெறும் பூஜைகளில் இந்த உறுப்புக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்” என்று கூறினார்.