June 20, 2017 தண்டோரா குழு
பெங்களூருவில், ஆம்புலன்ஸ் செல்வதற்காக குடியரசுத் தலைவரின் காரையே தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
கடந்த சனிக்கிழமை(ஜூன் 17)பெங்களூரில் மெட்ரோ சேவையை தொடங்கி வைப்பதற்காக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜனாதிபதி செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிக்க டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா நிறுத்தப்பட்டிருந்தார்.
அப்போது,அந்த வழியாக தனியார் மருத்துவமனை நோக்கி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த நிஜலிங்கப்பா ஜானதிபதி கார் வருவதையும் பொருட்படுத்தாமல் அங்கு வந்து கொண்டிருத்த அனைத்து வானங்களையும் நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார்.
மேலும், பெங்களூரு கிழக்குப்பகுதி போக்குவரத்து ஆணையர் அபிசேகோயால் என்பவர் தன்னுடைய சமூக வலைத்தளபக்கத்தில் நிஜலிங்கப்பாவிற்கு பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு சன்மானமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி காரையே நிறுத்தி ஒரு உயிரை காப்பாற்றி ஒரே நாளில் நிஜலிங்கப்பா அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அவருக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.