March 18, 2017 தண்டோரா குழு
மூன்று முறை, ‘தலாக்’ கூறி, விவாக ரத்து பெறும் முஸ்லிம்களின் நடைமுறையை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம் பிரிவு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.
முத்தலாக் முறையைத் தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “முத்தலாக் முறை, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அரசியல் சாசனத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்ட சமநிலைக்கு எதிரானது” எனக் கூறியிருந்தது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் (எம்.ஆர்.எம்.) ‘முத்தலாக்’ முறையை ஒழிக்கக் கோரும் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
அதில், பெரும்பாலான கையொப்பங்கள் முஸ்லிம் பெண்களுடையவை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் உள்ள பத்து லட்சம் முஸ்லிம்கள் கையெழுத்துப் போட்டிருப்பதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.