February 10, 2017 தண்டோரா குழு
தமிழக விவகாரத்தில் ஆளுநரே இறுதி முடிவு எடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தரப்பும் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை வியாழக்கிழமை சந்தித்தனர்.
ஆளுநருடனான தனது சந்திப்புக்குப் பின் ஓ.பி.எஸ். நிருபர்களிடம் பேசுகையில், ” நல்லதே நடக்கும் , வாய்மையே வெல்லும் ” என்றார்.சசிகலா தரப்பினர் சட்டப் பேரவையின் 130 உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவிற்கு உள்ளதால் ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சந்திப்புகள் பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த விவகாரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி முடிவு எடுப்பார். தமிழகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநரே என்பதால், அவரின் முடிவுக்கே இந்த விவகாரம் விடப்பட்டுள்ளது” என்றார்.