February 13, 2017 தண்டோரா குழு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா முதலமைச்சராக பதவியேற்க, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என்று அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை கூறுகையில்
“அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவுக்குத்தான் உள்ளது. எனவே, சசிகலாவை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க வரும்படி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆளுநரின் தாமதத்திற்கு வி.கே. சசிகலா மீது உச்ச நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் கூறப்பட்டது. அந்த வழக்கில் சசிகலா நிரபராதி.
பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு உள்ளது என்பதை ஆளுநர் கருத்தில் கொள்ள வேண்டும். அழைப்பு விடுப்பதில் ஆளுநர் தாமதம் செய்வது, தேவையற்ற ஊகங்கள், சந்தேகங்களுக்கு வழி வகுக்கும்” என்று வைகைசெல்வன் கூறினார்.