February 20, 2017 தண்டோரா குழு
தமிழக சட்டப் பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கையை சட்டப் பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆளுநர் மாளிகையில் அளித்தார்.
கடந்த 18-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் அறிக்கையை தமிழக ஆளுநர் மாளிகையில் சட்டப் பேரவை செயலாளர் ஜமாலுதீன் திங்கட்கிழமை அளித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டப் பேரவையில் நடந்த சம்பவம் குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியே புகார் அளித்திருந்தனர். அது தொடர்பாக விரிவான வீடியோ பதிவு காட்சிகளுடன் அறிக்கை அளிக்குமாறு சட்டப் பேரவை செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு குறித்து ஆளுநரிடம் அளிக்கப்பட வேண்டிய அறிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைத் தலைவர் தனபால், பேரவைச்செயலாளர் ஜமாலுதீனுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் ஆவணங்கள் மற்றும் அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுக்க பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் ஆளுநர் மாளிகை சென்றார். ஆளுநர் மும்பையில் இருப்பதால் ஆளுநரின் முதன்மைச் செயலரிடம் பேரவை நடந்தவை தொடர்பான அறிக்கை அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.