February 14, 2017
தண்டோரா குழு
திரைப்படக் கதையின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டியது அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் மூலம் தனது முந்தைய உத்தரவைத் திருத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3௦ம் தேதி, நாட்டில் உள்ள அனைத்து திரை அரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அவ்வாறு இசைக்கப்படும் போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தற்போது அந்தத் தீர்ப்பை மாற்றி, திரைப்படம், ஆவணப்படம், செய்திப்படம் ஆகியவற்றின் ஒரு பகுதியாகத் தேசிய கீதம் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்கவோ தேசிய கீதத்தைப் பாடவோ தேவை இல்லை என்று அறிவித்துள்ளது. தங்கல் திரைப்படத்தின் கதையின் ஒரு பகுதியாக தேசிய கீதம் இடம்பெற்றுள்ளது.
தேசிய கீதம், தேசபக்திப் பாடல், தேசிய கொடி ஆகியவை குறித்து மக்களிடம் பிரசாரம் செய்வதற்கான கொள்கையை உருவாக்கும்படி அறிவுறுத்தும்படி கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது அவசரமாகக் கருதி உத்தரவு வழங்க இயலாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.
“ஒரு தேசத்தில் வாழ்கிற குடிமக்கள் தேசிய கீதம் என்பது நாட்டின் அரசியல் சாசனத்தின்படி தேச பக்தி மற்றும் தேசத்தின் பண்பு ஆகியவற்றின் அடையாளம் என்பதை உணர வேண்டும் என்பதற்கான காலம் வந்துவிட்டது” என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கருத்து தெரிவித்தது.