March 11, 2017 தண்டோரா குழு
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில், பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், “ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளகிறேன்.
இந்தத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில், பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்துள்ள சூழ்நிலையைப் பார்க்கிறோம். விரைவில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலிலும் ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க மக்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாக இருக்கிறது” என்றார் ஸ்டாலின்.