January 26, 2025 தண்டோரா குழு
இணையதளம் மூலம் FedEX கூரியரில் போதை பொருட்கள் வந்துள்ளதை விசாரிக்கும் மும்பை சைபர் கிரைம் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பணத்தை மோசடி செய்த குழுவை சேர்ந்த நபரை கைது செய்த கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிக்கும் ரித்திகா என்பவருக்கு கடந்த 18.11.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் FedEx கூரியர் ஊழியர் எனவும் தன் அடையாளத்தை பயன்படுத்தி சில பார்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் போதை பொருள் மற்றும் சட்ட விரோதப் பொருட்கள் இருப்பதாகவும் புகார்தாரரிடம் கூறியுள்ளார்.பிறகு புகார்தாரரின் வங்கி கணக்கு விபரங்களை சரி பார்க்க வேண்டும் எனக்கூறி மும்பை சைபர் கிரைம் அதிகாரிகளுடன் ஸ்கைப் வீடியோ அழைப்பில் இணைய கூறியுள்ளார்.
மேலும் புகார்தாரரின் வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 10 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபரின் வங்கி கணக்கு மாற்றி உள்ளார்.அதன் பிறகு புகார்தாரர் தான் மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்ததை அறிந்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி பணத்தை இழந்த நபர் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன், விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில்,மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட புலன் விசாரணையில் டெல்லியைச் சேர்ந்த கோபி குமார் (42) என்பவர் மேற்படி வழக்கில் ஈடுபட்டது தெரியவந்து மேற்படி எதிரியை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் மேற்படி நபர் குஜராத், மகாராஷ்டிரா,டெல்லி, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மூலம் மோசடி செய்த மேற்படி எதிரியின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. மேற்படி எதிரியிடமிருந்து
மோசடிக்கு பயன்படுத்த லேப்டாப்கள், செல்போன்கள், hard disk, pendrive, ATM கார்டுகள், pan கார்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.