August 12, 2017 தண்டோரா குழு
ஆஸ்திரேலியாவில் ஆண் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 18 சதவிகிதம் கூடுதல் சேவைக் கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறையை ஒரு உணவகம் பின்பற்றி வருகிறது
ஆஸ்திரேலியாவின் அனைத்து பணியிடங்களிலும் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்கு குறைந்த அளவில் சம்பளம் தருவதால்,மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்த பெண்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலுள்ள புறநகர் ப்ருன்ஸ்விக் சந்தையில் ‘ஹாண்ட்சம் ஹேர்’ என்னும் உணவகம் உண்டு. அந்த உணவகத்தை ஆண்கள் உதவியின்றி பெண்களே நடத்தி வருகின்றனர்.
அந்த உணவகத்திற்கு வரும் ஆண்கள் 3 முக்கிய விதிகளை கடைபிடிக்க வேண்டும். முதலாவது, உணவகத்தில் பெண்களுக்கு தான் முதலிடம். இரண்டாவது, அங்கு வரும் ஆண்கள் 18% உணவு வரியை கட்டாயம் செலுத்த வேண்டும். மூன்றாவது, ஆண்களும் பெண்களை மதிக்கவேண்டும். அதே போல் பெண்களும் ஆண்களை மதிக்க வேண்டும். அந்த முறைக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். அதேநேரத்தில், பலர் அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
“ஆஸ்திரேலியாவில் பல ஆண்டுகளாக ஆண்களுக்கு அதிக சம்பளமும், பெண்களுக்கு குறைந்த சம்பளமும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண் ஆதிக்க முறைக்கு முடிவு காண வேண்டும் என்பதற்காக நாங்கள் எடுத்துக்கொண்ட அந்த முறையை குறித்து மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். ஆண்கள் அந்த வரியை கட்டாயம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் கூடுதல் தொகை வசூலிக்கப்படும். அந்த வரிகள் மூலம் வரும் பணத்தொகை ஆஸ்திரேலியாவின் பெண்கள் நல்வாழ்வு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” என்று அந்த உணவகத்தின் உரிமையாளார் தெரிவித்தார்.