November 22, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 33வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனியில் தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என தூய்மைப்பணியாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.25.8 லட்சம் மதிப்பீட்டில் 410 மீட்டர் நீளத்தில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட பொறியார்களுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல் கொடிசியா சாலை முதல் தண்ணீர்பந்தல் சாலை வரை ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் 1470 மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் விரைவில் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம் வழங்குமாறு அறிவுரை வழங்கினார்.இந்த ஆய்வுகளின்போது மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, உதவி கமிஷனர்கள் சேகர் (மேற்கு), முத்துராமலிங்கம் (கிழக்கு), உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, சுந்தாராஜன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தார்கள்.