July 20, 2017 தண்டோரா குழு
இங்கிலாந்தில் இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் இளம் வயது மருத்துவர் என்னும் பெருமையை பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த 21 வயதான அர்பன் ஜோஷி இங்கிலாந்தில் வசிக்கும் இளம் வயது மருத்துவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் தனது 13 வயது வரை கல்வி கற்றார். அவருடைய தந்தை பரத், காந்தி நகரில் இயந்திர பொறியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு பிரான்ஸ் நாட்டின் வேலை கிடைத்தவுடன், குடும்பத்தோடு அங்கு குடிபெயர்ந்தனர்.
தனது 17ம் வயதில், பள்ளி படிப்பை முடித்த பிறகு, பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், அவருடைய சான்றுகளை கண்ட ஷேப்பில்ட் பல்கலைக்கழகம், அவருக்கு 13,௦௦௦ பவுண்ட் உதவி தொகையை வழங்கியது. ஜோஷியின் படிப்பிற்கு அவருடைய பெற்றோர்கள் பண உதவி செய்தனர். இருப்பினும், தன்னுடைய படிப்பு செலவிற்காக, உள்ளூர் பள்ளியில் பகுதி நேர மத்திய உணவு மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.
இங்கிலாந்தின் ஷேப்பில்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ இளைநிலை பட்டமும், அறுவை சிகிச்சை இளைநிலை பட்டமும் பெற்றார். வட இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தனது பயிற்சியை தொடங்க உள்ளார்.