May 27, 2017 தண்டோரா குழு
வியட்நாம் நாட்டில் 97 வயது மூதாட்டி ஒருவர் கணினியை மிகவும் எளிதாக கையாண்டு இணையதளம் மூலம் சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார்.
வியட்நாம் நாட்டின் தலைநகரான ஹனோய் நகரில் லீ தீ என்னும் 97 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இந்த வயதிலும் அவர் புத்தகம் எழுதுவது, ஓவியம் வரைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக அவர் கணினியை மிக எளிதாக கையாளுகிறார்.
இணையதளம் மூலம் சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறார். வெளியூரில் உள்ள தனது உறவினர்களிடம் வீடியோ கால் பேசிவருகிறார்.இதற்கு காரணம் அவருடைய கற்றுக்கொள்ளும் பேரார்வம் தான்.
தன்னுடைய பேரனுடன் ஸ்கைப் மூலம் பேசுவது மற்றும் தனது 87 வயதில் தான் எழுதிய புத்தகம் குறித்து இணையதளத்தில் விவாதித்துமாக பொழுதை கழித்து வருகிறார்.
தளராத வயதிலும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தால், இணையதளத்தை பயன்படுத்த கற்றுக்கொண்டார் லீ தீ. இணையதளத்தின் கூகுள் மற்றும் யாஹூ ஆகிய தளங்களிலிருந்து செய்திகளை அறிந்து வருகிறார்.
கடந்த 2௦௦7-ம் ஆண்டு, தன்னுடைய ‘Upstream’ என்னும் சுயசரிதையை எழுதிகொண்டிருந்தார். ஆனால், அவரால் காகிதத்தையும் பேனாவையும் கொண்டு எழுத முடியவில்லை.
இதை அறிந்த அவருடைய பேர பிள்ளைகள், அவருக்கு மடிக்கணினி ஒன்றை வாங்கி தந்தனர். அதை பயன்படுத்தி தன்னுடைய சுயசரித்தையை எழுதி முடித்தார். கடந்த 2௦1௦-ம் ஆண்டு அதை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“எனக்கு தற்போது 97 வயது என்றாலும், என்னுடைய ஆன்மாவிற்கு வயது 2௦” என்று அவர் கூறினார்.