March 29, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் எந்த அளவிற்கு சமூக அமைதி உள்ளதோ அந்த அளவிற்கு பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், சிறுபான்மையினர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,
முதல்வரின் ஆணைப்படி மாநில சிறுபான்மை ஆணையம் பல்வேறு மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி வருகிறது. அதன் 9வது கூட்டமாக கோவை மாவட்டத்தில் இன்று அக்கூட்டம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்வில் 6 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக 27பேருக்கு 2 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கான நிதி உதவியும்,கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 23 பேருக்கு 6 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், ஒரு பயனாளிக்கு 7 லட்சம் ரூபாய் கடன் உதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு 5 மாவட்டங்களுக்கு சிறுபான்மையினர் மக்கள் நலனுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதில் கோவை மாவட்டத்திற்கு ஒரு அதிகாரி முதல்வரால் நியமிக்கப்பட உள்ளார்.அந்த அதிகாரி மாவட்ட ஆட்சியருக்கு கீழ் செயல்படுவார் எனவும் தெரிவித்தார்.வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி வேண்டும் என்பதே பெரும்பாலான சிறுபான்மையினர் மக்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்த அவர், இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அவர்களின் இல்லங்களிலிருந்தோ சில தனி இடத்தில் இருந்தோ வேண்டுதல்கள் செய்வதற்கு எவ்வித இடையூறுகளும் இருக்காது என்ற உறுதியை மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், அதே சமயத்தில் சிறுபான்மையின மக்கள் ஆராதனை வேண்டுதல் என்ற பெயரில் ஒலிபெருக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். சமூக அமைதிக்கு இடையூறு செய்ய வேண்டாம் என ஆலோசனையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் எந்த அளவிற்கு சமூக அமைதி உள்ளதோ அந்த அளவிற்கு இந்த மாவட்டத்தின் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் சமூக அமைதியை சீர்குலைக்கவும் மக்களிடையே மத ரீதியாக பிளவு ஏற்படுத்தி அரசியல் செய்யவும் சிலர் முயற்சிப்பதாக விமர்சித்தார். அவர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த அவர் இது திராவிட மாடல் ஆட்சி என்றும் குஜராத் மாடல் ஆட்சி அல்ல என கூறினார்.
இன்று நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் தேவை என்றும் பள்ளிக்கூடம் தேவை என்றும் வங்கி ஒன்று தேவை என்ற கோரிக்கைகள் வந்துள்ளதாக கூறிய அவர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என தெரிவித்தார்.
சிறுபான்மை இன மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டம் ஒன்றிய மற்றும் மாநில அரசினால் உள்ளதாக தெரிவித்த அவர் ஒன்றிய அரசு செயல்படுத்த வேண்டிய திட்டங்களில் சிறுபான்மையின மக்கள் வசிக்கக்கூடிய சில பகுதிகள் விடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு பதிலளித்த அவர், அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மயானம் மற்றும் எரியூட்டு மேடையும் அனைவருக்கும் பொதுவானது எனவும் இங்கு செல்கின்றவர்கள் மத அடையாளங்களை துரந்துவிட்டு தான் செல்ல வேண்டும் முதல்வரின் எண்ணமும் அதுதான் என கூறினார்.
மதத்தின் அடிப்படையில் சடங்குகளை செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அவர்கள் சொந்த செலவில் கல்லறைகளை வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். சிறுபான்மை ஆணையத்தின் கீழ் மாணவர்கள் மகளிர் உள்ளிட்டோருக்கு பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.