April 15, 2017 தண்டோரா குழு
‘ஐ.என்.எஸ் சென்னை’ போர் கப்பல் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. வரும் 18- ம் தேதி வரை இந்த கப்பலை மக்கள் பார்வையிடலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடற்படையின் மிக முக்கியமான மற்றும் பெரிய போர் கப்பலாக ‘ஐ.என்.எஸ் சென்னை’ கப்பல் கருதப்படுகிறது. கடந்த நவம்பர் 21-ம் தேதி மும்பையில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட இந்த கப்பல், 163 மீட்டர் நீளமும், 7500 டன் எடையும் கொண்டது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலில் தரையில் இருந்து இலக்கை தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் மற்றும் தரையிலிருந்து வானை நோக்கி இலக்கை தாக்கி அழிக்கும் பராக் 8 ஆகிய இரண்டு ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளன. எதிரிகள் நீர் மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தினாலும், அதை அழிக்கும் திறன் கொண்டது.
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், மக்களின் பார்வைக்காக இந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 18- ம் தேதி வரை இந்த கப்பலை பார்வையிடலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.