July 25, 2023 தண்டோரா குழு
கோவையில் நிலையான இந்தியா-2023′ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி துவங்கியது.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Solar Energy Corporation of India (SECI) மற்றும் தன்னார்வ அமைப்பான நிலைத்தன்மை ஆற்றல் பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (SEPA) மற்றும் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி ஆகியோர் இணைந்து,’நிலையான இந்தியா-2023′ என்ற தலைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் கல்லூரியில் துவங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில்,முன்னதாக ஜி.ஆர்.ஜி.டிரஸ்ட் நிறுவனர் அறங்காவலர் நந்தினி அனைவரையும் வரவேற்று பேசினார்.SEPA அமைப்பின் தலைவர் ரகுராம் அர்ஜுனன்,கேரள மாநில மின்சார வாரியத்தின் முன்னால் முதன்மை பொறியாளர் அனில் பிள்ளை, சென்னை ஐ.ஐ.டி யைச் சேர்ந்த அரவிந்த் குமார், ஓய்வு பெற்ற மின்சார வாரிய அலுவலர் சிவலிங்கராஜன்,மற்றும் துறை சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆனந்த்,ரமேஷ் ஆகியோர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கில், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான தொழில்நுட்பங்கள், சூரிய ஆற்றல் மற்றும் பசுமை ஆற்றல் ஆகிய தலைப்புகளில் தொழில் துறையினர் மற்றும் எரிசக்தி துறை வல்லுனர்கள் பங்கேற்கும் அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்தரங்கின் துவக்க விழாவில், கிருஷ்ணம்மாள் கல்லூரியின் செயலர் முனைவர் யசோதா தேவி, மற்றும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் ஏராளமான மாணவிகள், தொழில் முனைவோர் மற்றும் ,பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.