July 24, 2017
தண்டோரா குழு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியுடன் போராடி தோல்வியடைந்தது. எனினும் மற்ற போட்டிகளில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.
இறுதிப்போட்டியில் தோற்றிருந்தாலும், ‘போட்டியில் தான் தோற்றீர்கள், ஆனால் எங்கள் இதயத்தை வென்றுவிட்டீர்கள்’ என்று சமூக வலை தளங்களில் ரசிகர்கள் மத்தியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
இந்நிலையில்,வருகின்ற புதன்கிழமை அன்று இந்திய அணி தாயகம் திரும்புகிறது. இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக மகளிர் அணிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி வீராங்கனைகள் அனைவரின் நேரத்திற்கு ஏற்றபடி இந்த வரவேற்பு விருந்திற்கான தேதி முடிவு செய்யப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி, பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல், ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 50 லட்சம், அணியில் பணி புரிந்தவர்களுக்கு தலா 25 லட்சம் என வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.