June 5, 2023 தண்டோரா குழு
இந்திய மருத்துவ கழகம் (ஐ.எம்.ஏ.), இந்திய மருத்துவமனை வாரியம் சார்பில் தேசிய கருத்தரங்கு கோவையில் நடந்தது. இதில் மருத்துவ காப்பீட்டில் நடக்கும் இடர்பாடுகள், அவற்றை நிவர்த்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.இதில் இந்திய மருத்துவகழக தேசிய தலைவர் சரத் அகர்வால் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
இந்திய மருத்துவ கல்வியை மத்திய அரசு சீர்குலைத்து வருகிறது. குறிப்பாக இளநிலை மருத்துவ படிப்பில் அலோபதி, நேச்சுரோபதி
என பல்வேறு படிப்புகளை ஒருங்கிணைத்து தருகிறது.இது மருத்துவ படிப்பின் தரத்தை சீர்குலைக்கிறது. எனவே மருத்துவ கல்வி தொடர்பாக கொள்கை முடிவுகளை எடுக்கும் போது இந்திய மருத்துவ கழகத்தையும்
கலந்து ஆலோசிக்க வேண்டும். நமது நாட்டில் ஒட்டு மொத்தமாக 50 சதவீதம் பேரிடம் தான் மருத்துவ காப்பீடு உள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் உயர்ரக எந்திரங்கள் இருக்கிறது. அவற்றின் விலை அதிகம். மேலும் மருந்துகளின் விலை, பரிசோத னைகளுக்கான செலவு என்று எதுவுமே மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்றார்.
கருத்தரங்கில், ஒற்றை சாளர முறையில் வெளிப்படைத்தன்மையுடன் தகுதி வாய்ந்த அனைத்து மருத்துவனைகளை யும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களில் பதிவு செய்ய வேண்டும். இதனால் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே இருக்கும் மருத்துவ மனைகளில் உயர்ரக சிகிச்சையை பெற முடியும்.
அறிவியல் முறைப்படி மருத்துவ சேவைகளின் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். மருத்துவ குறைதீர் மன்றம் அமைத்து குறைகளை சரி செய்து மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கோவை தலைவர்ரவிக்குமார், கருத்தரங்கு ஒருங்கிணைப்பு செயலாளர் கார்த்திக் பிரபு, தமிழக தலைவர் செந்தமிழ் பாரி உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.