October 5, 2023 தண்டோரா குழு
உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு கோவையில் துவங்கிய மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டு வருகின்றனர்.
அக்டோபர் 4ம்தேதி முதல் 10 ம்தேதி வரை, உலக விண்வெளி வாரமாக கடைபிடிக்க பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஶ்ரீ ஹரிகோட்டா இந்திய விண்வெளி மையம்,சதீஷ் தவான் விண்வெளி மையம் இணைந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய விண்வெளி கண்காட்சி இன்று துவங்கியது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் எஸ்.எஸ்.எல்.வி, மற்றும் ஜி.எஸ்.எல்.வி, உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ராக்கெட்டுகள் மாதிரி, சந்திராயன் 3, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.இந்த கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் கண்காட்சியில் பங்கு கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி கண்காட்சி குறித்த போட்டிகள், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், விண்வெளி ஆய்வுகள் தொடர்பான சிறப்பு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.