March 9, 2016 tamil.oneindia.com
சென்னையில் காலை 6.22 முதல் கிட்டதட்ட 26 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதனை காண சென்னை பெசன்ட்நகர் எலியாட்ஸ் கடற்கரையில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மேலும், வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை பார்க்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் வருகின்ற நிகழ்வுதான் சூரியகிரகணம் ஆகும்.
சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில்தான் நிகழும். பொதுவாக, ஓராண்டில் 2 முதல் அதிகபட்சம் 5 சூரிய கிரகணங்கள் ஏற்படலாம்.நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணமான இதனை இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் முழுவதுமாக காண முடியும். சென்னையில் காலை 6.22 முதல் 15 நிமிடங்களுக்கு சூரிய கிரகணத்தை காண முடிந்தது.
இந்நிலையில் சூரிய கிரகணத்தினைத் தொடர்ந்து திருமலையில் ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இன்று காலை 5:30 முதல் 9:30 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளதால் அதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் கோவில்கள் மூடப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு 8:30 மணிக்கு திருமலையில் ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது.அதற்குள் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் முடித்து அனுப்ப வேண்டும் என்பதால் மாலை, 6:00 மணி முதல், தரிசன வரிசை மூடப்பட்டது. அதன்பின் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் செய்து கோவிலை தேவஸ்தான அதிகாரிகள் மூடினர்.
இன்று காலை சூரிய கிரகணம் நிறைவு பெற்ற பின் 9:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின் ஏழுமலையானுக்கு பூஜைகள் செய்து காலை 11:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.