May 20, 2017 தண்டோரா குழு
அரசு பள்ளிகளில் 3 வண்ண சீருடைகள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.திருச்செங்கோட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் இன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
அப்போது விழாவில் பேசிய அவர்,
அடுத்த கல்வியாண்டு முதல் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கபடும் என்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட், ஜே.இ.இ தேர்வை எதிர்கொள்ள பயிற்சி தரப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் மாவட்டம் தோறும் அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களாக தமிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். சமீபத்தில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி முடிவில் மதிப்பெண் பட்டியல் அறிவிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு இரண்டு தேர்ச்சி முடிவிலும் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.