March 26, 2016 பி.எம்.முஹம்மது ஆஷிக்
பொது இடங்களில் சிறுநீர் கழித்தால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றத்தில் இருந்து தூய்மை இந்தியா திட்டம் மூலம் நாட்டைத் தூய்மை படுத்த பல்வேறு திட்டங்களைச் செய்து வருகிறது. எனினும், பொது இடத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழித்து வரும் பழக்கம் பெரும்பாலும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலத் தலைமை செயலாளர்களுக்கும், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள், சிறுநீர் கழிப்பவர்களுக்கு 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கும் சட்டம் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் நடைமுறையில் உள்ளதாகவும், இதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், பிரதமர் மோடியின் சுகாதாரத் திட்டத்தை வலுப்படுத்தும் விதமாக, வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் இதைச் செயல்படுத்த வேண்டும் எனவும், 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இதனை 10 முதல் 15 நகரங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்த வேண்டும் எனவும் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நகரின் அனைத்து இடங்களிலும் போதிய கழிப்பறை வசதிகள், குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். வீட்டுக்கே சென்று குப்பைகளைச் சேகரித்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முறையான வசதிகள் இருந்தால் பொது இடத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க வேண்டிய அவசியம் மக்களுக்கு இருக்காது எனச் சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.