February 27, 2023 தண்டோரா குழு
கோவை வருங்கால வைப்புநிதி இபிஎப் பென்சன் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிக்க கோரி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஒன்றிய அரசின் துறை அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் ஐவுளி துறை அமைச்சர்களுக்கு தனித்தனியாக எழுதியுள்ள கடிதத்தில்
3.03.2023 அன்றைய தேதியின் அடிப்படையில் அதிக பிஎப் ஓய்வூதியத்திற்கான உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதியை நீட்டிக்குமாறு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி, பிற தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இவர்களில், பெரும்பாலான ஓய்வூதியதாரர்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். உடனடியாக தகவல் அறிய இயலாத நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே இந்த செய்தி இபிஎப் அமைப்புகளின் மூலம் அவர்களை சென்றடைய கூடுதல் கால அவகாசம் வேண்டும். எனவே, அதிக பிஎப் ஓய்வூதியக் கோரிக்கைப் படிவங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பது பற்றிய தகவலறியாத விபரங்கள் இல்லாத இபிஎப் சந்தாதாரர்களால், செயல்முறையை குறுகிய காலத்தில் முடிக்க முடியாது. மேலும், இபிஎப் ஓய்வூதியம் பெறுவோர் மிகவும் சிரமத்தில் இருப்பவர்களாக உள்ளனர்.
ஆகவே, தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், சங்கங்களின் கூட்டு அறிக்கையை இபிஎப்ஓ இணையதளத்தில் பதிவேற்றலாம், தாங்களும் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் எனவும், இந்த அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை கூடுதலாக்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.