March 11, 2023 தண்டோரா குழு
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை போற்றும் விதமாக கடைபிடிக்கும் தவக்காலத்தில் கோவை ஒண்டிப்புதூர் தூய யோசேப்பு ஆலயத்தில் நடைபெற்ற தத்ரூபமான நாடக அரங்கேற்றத்தை வியந்து ரசித்த கிறிஸ்தவ பெருமக்கள்.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பாடுகள் மரணம் மற்றும் உயிர்ப்பை சிறப்பாக தியானித்து ஜெபிக்கின்ற நாட்களை தவக்காலம் என்று அழைக்கின்றனர்.இந்த 40 நாட்களில் சிறப்பு ஜெபங்கள்-சிலுவை பாதை தியானித்தல், தவம், தர்மம் செய்து இயேசுவின் பாடுகளோடு தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் விரதங்கள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.
இன்னும் கூடுதலாக.பல இடங்களில் இயேசுவின் பாடுகளை தத்ரூபமாக நடித்து மக்கள் மத்தியில் ஆன்மீகத்தை வளர்த்து வருகின்றனர்.அந்த வகையில் கோவை மறைமாவட்டம் ஒண்டிபுதூர் தூய யோசேப்பு ஆலயத்தில், பாசன் பிளே இந்தியா (Passion Play India) என்ற அமைப்பு சார்பாக ”அவர் உயிரோடு இருக்கிறார்” எனும் சிறப்பு ஒளி – ஒலி நாடகம் நடைபெற்றது. இந்தியா மற்றும் உலக நாடுகளின் பல பகுதிகளிலும் நடத்தி வரும், இந்த அமைப்பை சார்ந்த கலைஞர்கள் பெங்களூரு, மற்றும் தமிழகத்தின் பெரியகுளம், கன்னியாகுமரி, சென்னை, திருவண்ணாமலை, வேலூர், உள்ளிட்ட பகுதிகளிலை சேர்ந்த கலைஞர்களோடு உள்ளூர் இறைபற்றுடன் கூடிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவ மாணவியர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட கலைஞர்களைக் கொண்டு நாடகக் கலைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இதற்கான துவக்க நிகழ்ச்சியை,கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் துவக்கி வைத்தார்.கோவை மறைக்கோட்ட அதிபரும் பங்குத்தந்தையுமான ஜார்ஜ் தனசேகர் உட்பட அருட் தந்தையர் பலர் இதில் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை ஒண்டிபுதூர் பங்குதந்தை ஆரோக்கியசாமி (மணி) அடிகளாரும் உதவி பங்குதந்தை ரகு இம்மானுவேல் செய்திருந்தனர்.இதில்,”பாசன் பிளே இந்தியா (Passion Play India)” அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வினீத் ஒருங்கிணைப்பில்,கிருஷாந்தி நாடகத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.