May 14, 2016 தண்டோரா குழு.
சென்னையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜானுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த மத்திய அமைச்சர் ஸ்ருமிதி இராணி இரட்டை இலை சின்னத்தைக் காட்டி வாக்கு சேகரித்ததால் கலகலப்பு.
மே 16ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்காகத் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக முன்னணி தலைவர்களை தமிழகத்திற்கு வரவழைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை விருகம்பாக்கத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பிரச்சாரம் செய்தார்.
அப்போது ஸ்மிருதி இராணி, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்குத் தாமரை மொட்டுகளால் கோக்கப்பட்ட பெரிய மாலை அணிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஸ்மிருதி இராணி வெற்றியைக் குறிக்கும் வகையில், இரட்டை விரலைக் காட்டி மக்கள் மத்தியில் புன்னகைத்தார். உலகளவில் இரண்டு விரல்களை அசைத்துக் காட்டினால் அது வெற்றியின் சின்னம். அதுவே, இரண்டு விரல்கள் தமிழகத்தில் காட்டினாள் இரட்டை இலையே சுட்டிக்காட்டும்.
ஸ்மிருதி இராணி வெற்றிச் சின்னமாக இரட்டை விரலைக் காட்டும் போது தமிழக சூழலைப் புரிந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் அதைத் தடுத்தார். பின்னர் ஸ்மிருதி இராணியின் இரு விரல்களை மடக்கிய தமிழிசை, முழுவதுமாக கையசைக்கச் செய்தார். அப்போதுதான் அதன் அர்த்தம் ஸ்மிருதி இராணி சிரித்துவிட்டு கையை அசைத்தார். இதனால் அங்குச் சிரிப்பு அடங்கச் சிறிது நேரம் ஆனது.