October 20, 2023 தண்டோரா குழு
கௌரா எலக்ட்ரிக் நிறுவனம் இரண்டும் மாடல்களில் அதிவேக திறன் கொண்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
உள்நாட்டு எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான கௌரா எலக்ட்ரிக் நிறுவனம் இரண்டும் மாடல்களில் அதிவேக திறன் கொண்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது.
புதிய ஸ்கூட்டர்கள் அறிமுக விழாவில், கௌரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கௌதம் பேசுகையில்,
கௌரா எலக்ட்ரிக் நிறுவனம் ஜி5 மற்றும் ஜி6 ஆகிய இரண்டு மாடல்களில் புதிய ஸ்கூட்டரை ரூபாய் 99 ஆயிரம் மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பாதுகாப்பு மற்றும் அதிவேக திறன் கொண்ட ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.
மேலும் இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 65 கிலோ மீட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டர்களுக்கு பதிவு எண் மற்றும் வாகன காப்பீடு கட்டாயமாகும். இதில் பக்கவாட்டு ஸ்டாண்ட் எச்சரிக்கை, ரிவர்ஸ் ஆப்ஷன் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களும் உள்ளன. மேலும் இந்த ஸ்கூட்டர்களில் லித்தியம் பெரஸ் பாஸ்பேட் வேதியல் தொழில்நுட்பத்தில் தயாரான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏ ஐ எஸ் 156 தரச்சான்று பெற்றுள்ளது. இது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை ஒரு புதிய நிலைக்கு எடுத்து செல்கிறது. மேலும் இந்த எல்எப்பி பேட்டரி இந்திய தட்பவெப்ப நிலைக்கு மிகவும் உகந்தது. இதில் உள்ள 100% எல்இடி லைட் சிஸ்டம் பாதுகாப்பான மற்றும் சிறப்பான லைட்டிங்கிற்க்கு உத்தரவாதம் அளிக்கிறது என தெரிவித்தார்.