August 28, 2023 தண்டோரா குழு
கோவை அனுவாவி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரோப்கார் அமைப்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் .ரமேஷ், செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-
மலை கோயில்களில் பக்தர்களுடைய வசதிக்காகவும் வயதானவர்கள் மற்றும் நடக்க இயலாதவரகளின் வசதிக்காகவும் அதிக அளவில் மலைக் கோயில்களில் இறையன்பர்கள் வருகின்ற திருக்கோவில்களுக்கு ரோக்கர் அல்லது தானியங்கி லிப்ட் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று 560 படிகள் கொண்ட முருகர் வீற்றிருக்கின்ற சிவனும் குடிகொண்டிருக்கின்ற அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருக்கோவிலுக்கு ரூ.13 கோடி மதிப்பில் 420 மீட்டர் உயரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தி தர தமிழ்நாடு தொழில் மற்றும் தொழினுட்ப ஆலோசனை நிறுவனம் நிறுவனத்தினர் கள ஆய்வு மேற்கொண்டு.
சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கான அறிக்கை பெற்றவுடன், ரோப் கார் வசதி அமைக்கும் பணி நடைபெறும். அவ்வாறு அமைக்கும் போது பக்தர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு அவர்களின் அடிப்படை தேவைகளான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோலவே திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, இடும்பன் மலை, திருப்பரங்குன்றத்திலே அமையபெற்றுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் ரோப் கார் வசதி ஏற்படுத்தவும் ஏற்கனவே பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கரூர் அய்யன்மலை திருக்கோயில், சோளிங்கர் நரசிம்ம பெருமாள் திருக்கோயில், ஆகிய திருத்தலங்களிலு ரோப்கார் வசதி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதுவும் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
கோவை மருதமலையில் மற்றும் சுவாமி மலையில் உண்டான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு மருதமலையில் தானியங்கி லிப்ட் தற்போது அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.சுவாமி மலையில் அடிப்படை வசதிகள் கண்டறிவதற்கு மேற்கொண்ட ஆய்வுக்குழுவினர் சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் சுவாமி மலையில் தானியங்கி லிப்ட் அமைக்கப்பட உள்ளது. இது போல மலைக்கோயில்களில் பக்தர் வசதிகளுக்காக தேவைப்படும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனே நிறைவேற்ற முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.எனவே பக்தர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.
அப்பணிகளை, இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு துரிதப்படுத்தபட்டு வருகிறது. இந்த ஆட்சியை பொருத்தவரையில் இதுவரையில் சுமார் 922 திருக்கோயில்கள் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரலாற்றிலேயே இரண்டு ஆண்டுகளில் 922 திருக்கோயில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது தற்போதைய ஆட்சியில் தான். அதேபோல் ரூ.5135 கோடி மதிப்பிலான திருக்கோயிலுக்கு சொந்தமான 5335 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இறையன்பர்களுக்கும் மகிழ்ச்சியான ஆட்சி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.