April 20, 2017 தண்டோரா குழு
டெல்லியில் கடந்த 37 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அளித்த உறுதியை அடுத்து இரண்டு நாட்களுக்கு நூதன போராட்டங்களை நடத்தமால் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், பயிர்கடன் மற்றும் விவாசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக போராடிய விவசாயிகள் நேற்று 36-ஆவது நாளாக உடைகளை கிழித்துக்கொண்டு பைத்தியக்காரர்கள் போல போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சக போராட்டகாரர்களின் கருத்துக்களை கேட்டறிந்த போராட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு, பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு,
“ விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய நிதியமைச்சரிடம் வலியுறுத்தப்படும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். அவர் அளித்த உறுதி காரணமாக 2 நாட்களுக்கு நூதன போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் நிதி அமைச்சரிடம் இருந்து கடன் தள்ளுபடி குறித்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் முழுமையாக போராட்டம் வாபஸ் பெறப்படும்,” என தெரிவித்தார்.