August 19, 2017 தண்டோரா குழு
புதுச்சேரியில் இரவு வேளையில் பெண்களின் பாதுக்காப்பை அறிய ஆளுநர் கிரண்பேடி இருசக்கர வாகனத்தில் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக முதல்வர் நாரயணசாமிக்கும், ஆளுநருக்கும் இடையே பல முறை கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. ஆளுநர் எந்த தொகுதிக்கு சென்றாலும் அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவிப்பது இல்லை என்று நாராயணசாமி குற்றம்சாட்டி வந்தார்.
எனினும், ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்த வண்ணமே உள்ளார். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இரவில் பெண்கள் பாதுக்கப்பு மற்றும் குற்றம் நடக்காமல் இருக்க போலீசார் பணியில் ஈடுபடுகின்றனரா என்று முகத்தை மூடியவாறு, இருசக்கர வாகனத்தில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி டிஜிபி சுனில்குமார் கவுதமுக்கு இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை போலீசார் மோட்டார்சைக்கிளில் ரோந்து செல்ல வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தான் இரவு ரோந்து சென்றபோது சீருடை அணிந்த ஒரு காவலரை கூட காணவில்லை.
காவல்கட்டுப்பாட்டு அறையில் இரவு நேர அழைப்புகளுக்கு பொறுப்பு யார்? என்பதை எழுத்துப்பூர்வ கட்டளை மூலம் தெரியப்படுத்த வேண்டும். இதனை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். எனக் கூறியுள்ளார்.