April 8, 2017 தண்டோரா குழு
கோவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் மட்டுமே பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகனங்களுடன் கலந்துகொண்டனர்.
கோவையில் ஏ.எஸ்.கே என்ற என்ற தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியானது கோவை வ.உ.சி மைதானத்தில் இருந்து ஆனைகட்டி வரை சுமார் 40 கி.மீ தூரம் நடைபெறுகின்றது.பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த இரு சக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இரு சக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து பேட்டியளித்த காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி,
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறையால் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இரு சக்கர பேரணி செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வானது ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.மேலும் ஆனைகட்டியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.