April 22, 2017
தண்டோரா குழு
இரட்டை இலைச் சின்னத்தை மீட்பது தொடர்பாக இரு அணிகள் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வரும் 24-ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பேச்சு நடத்துவர்கள் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கியது. இதனால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது.இதன் காரணமாக கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நடத்துவதற்கு, பிரிந்த அணிகள் மீண்டும் இணைவது அவசியம் என்பதை உணர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டது.
தற்போது இரு தரப்பினரும் வரும் 24 ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் கூறுகையில்
“இரட்டை இலைச் சின்னம் மீட்பது தொடர்பாக இரு அணிகள் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வரும் 24 ம் தேதி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பேச்சு நடத்துவர்கள்” என்றார் ஜெயக்குமார்.