September 16, 2017 தண்டோரா குழு
அட்லாண்டிக் கடலில் உருவாகிய இர்மா புயல், கரீபியன் தீவுகளை பதம்பார்த்த பிறகு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தை தாக்கியது. ப்ளோரிடா கடலோர பகுதியிலிருந்த மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ப்ளோரிடா மாகாணத்தில் சிறுவர்கள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த காப்பகத்தை சேர்ந்த சுமார் 7௦ சிறுவர்கள் புயல் காரணமாக வேறு இடங்களுக்கு செல்ல விரும்பினர்.
அமெரிக்காவின் பென்ட்ஹவுஸ் பத்திரிகையின் முன்னாள் நிர்வாகி மார்க் பெல், அந்த சிறுவர்களின் விருப்பத்தை கேள்விப்பட்டார். உடனே அவரும் அவருடைய மனைவி ஜெனிபரும், ப்ளோரிடாவில் உள்ள போகோ ராடன் பகுதியிலிருக்கும் தங்களுடைய 3௦ கோடி ரூபாய் வீட்டில் அந்த சிறுவர்கள் வந்து தங்க ஏற்பாடு செய்தனர்.
அங்கு வந்த சிறுவர்களுக்கு இசை நிகழ்ச்சிகள், பலூன் கலைஞர்களின் வித்தை, சிறுமிகளுக்கு சிகை அலங்காரம் ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சி படுத்தினர்.
“சில குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை, வேறு சில குழந்தைகளுக்கு பெற்றோர் இருந்ததும், அவர்களுடைய அன்பு கிடைக்கவில்லை. ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு என்ன செய்ய விரும்புவரோ, அதையே தான் நானும் செய்கிறேன்” என்று ஜெனிபர் தெரிவித்தார்.