September 12, 2017 தண்டோரா குழு
ப்ளோரிடா மாகணத்தை தாக்கிய ‘இர்மா’ புயலால், மருத்துவமனைக்கு செல்ல முடியாத கர்ப்பிணி பெண், தொலைபேசி மூலம் மருத்துவர்கள் தந்த ஆலோசனை பின்பற்றி குழந்தைப் பெற்றார்.
அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல் கரீபியன் நாடுகளை பதம் பார்த்த பிறகு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தை கடுமையாக தாக்கியது. ப்ளோரிடாவின் கடலோரப்பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ப்ளோரிடாவில் வசித்து வந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இர்மா புயல் காரணமாக மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த அவர், உடனே அவசர எண் 911க்கு தொடர்பு கொண்டு, தனது நிலையை தெரிவித்தார்.
தகவல் அறிந்த அவர்கள், உடனே ஜாக்சன் மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு தகவல் தந்தனர். ஆனால், அவர்களாலும் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை. அந்த பெண்ணை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு, குழந்தையை வெளியே எடுக்க ஆலோசனை அளித்தனர்.
அவர்கள் தந்த ஆலோசனையை பின்பற்றி, குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்தார். மறுநாள் காலை, ஜாக்சன் மருத்துவமனை மருத்துவர்கள், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரையும் அவருடைய குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் ஜாக்சன் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். தாயும் சேயும் ஆரோக்கியமாக இருக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.