November 7, 2017 தண்டோரா குழு
மும்பையில் இறந்த மகனின் உடலை அடக்கம் செய்யாமல், சுமார் 11 நாட்கள் தேவாலயத்தில் வைத்து உயிர்பெற்று வர பிராத்தனை செய்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையின் நாக்பாடா என்னும் இடத்தில்,‘ஜீசஸ் பார் ஆல் நேசன்ஸ்’ என்னும் கிறிஸ்துவ அமைப்பை, ஆக்டேவியோ நேவிஸ் என்பவர் நடத்தி வருகிறார். அவருடைய மகன் மேஷாக்(17) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி சிகிச்சைக்கு பலனிற்றி உயிரிழந்தார்.
இறந்த மகனின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்யாமல், அம்பேர்நாத் காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள தேவாலயத்தில் பதம் செய்யப்பட்ட மகனின் உடலைசுமார் 11 நாட்கள், ஒரு ஐஸ் பெட்டியில் வைத்துள்ளனர். கடவுள் அவனை மீண்டும் உயிரோடு எழுப்புவர் என்று அவன் குடும்பத்தினரும் சுமார் 25௦ ஆலயத்தின் உறுப்பினர்களும் பிராத்தனை செய்து வந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தரப்பட்டது. தகவல் அறிந்த அவர்கள், ஆலயத்திற்கு சென்று, சிறுவனின் இறுதி சடங்கை செய்யுமாறு பெற்றோரிடம் கூறினர். அப்படி செய்யாவிட்டால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
சிறுவனின் உடலை ஆம்பேர்நாத்திலிருந்து நாக்படாவிற்கு எடுத்து செல்ல பெற்றோர் அனுமதி கேட்டனர். செவ்வாய்கிழமை(நவம்பர் 7) சிறுவனுக்கு இறுதி சடங்கு செய்யப்படும் என்று பெற்றோரிடமிருந்து கடிதம் ஒன்றை எழுதி வாங்கிய பிறகு, உடலை எடுத்து செல்ல அனுமதி தந்தனர்.
“நாங்கள் அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. அவர்களை கண்காணித்து வருகிறோம்” என்று ஆம்பேர்நாத் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.