December 24, 2016 தண்டோரா குழு
“நான் செத்துப் புழைச்சவண்டா…” என்று எம்ஜிஆர் ஒரு திரைப்படத்தில் பாடிய பாடல் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல். காரணம், அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி, உயிர் பிழைத்துவந்தவர்.
அதைப்போல், நாற்பது ஆண்டுக்கு முன் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு மூதாட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் திரும்பி வந்திருக்கிறார். அவர் தற்போது தனது இரு பெண்களுடன் சேர்ந்துள்ளார்.
உத்தரப் பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பித்னூ கிராமத்தைச் சேர்ந்தவர் விலாசா (82). இவர் 1976ஆம் ஆண்டு வயல் பகுதியில் கால்நடைகளுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்றபோது அவரை ஒரு கருநாகம் தீண்டியது. அதையடுத்து மயங்கி விழுந்துவிட்டார். இதையெடுத்து, அவரை அருகில் கிராமத்தில் உள்ள மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பல்வேறு சிகிச்சை அளித்தும் விலாசா அசைவற்றுக் கிடந்தார். இதனால் அவர் இறந்துவிட்டதாக எண்ணி அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதிச் சடங்கு செய்து கங்கை ஆற்றில் மிதக்க விட்டுள்ளனர்.
அங்கிருந்து மிதந்து சென்ற அவருடைய “உடல்” கன்னாஜ் மாவட்டத்தை அடுத்த சிறு கிராமத்தில் கரை ஒதுங்கியுள்ளார். அங்குள்ள படகோட்டி ஒருவர் பக்கத்து கிராமத்திற்குக் கொண்டு சென்று அப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அவருக்கு உயிர் இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், அவருக்குப் பழைய நினைவுகள் இன்றி கடந்த ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் விலாசாவிற்குத் தன் பழைய நினைவுகள் வந்துள்ளன. இதனையடுத்துதான் வசித்து வந்த வீட்டில் உள்ளவர்களிடம் பழைய நினைவுகளைக் கூறியுள்ளார்.
இதையெடுத்து, அவர்கள் உதவியுடன் விசாலா தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பினார். அங்கு, அவரைப் பார்த்த, அவரது மகள்கள் ராம்குமாரியும் முன்னியும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
இறந்துவிட்டதாக நினைத்த ஒருவர் 40 ஆண்டுகளுக்கு பின் தனது இரண்டு மகள்களுடன் இணைந்தது அப்பகுதியில் மக்களுக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.