July 7, 2017 தண்டோரா குழு
இஸ்ரேல் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்திய பிரமதர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் பெற்றார்.
இதையடுத்து, கடல்நீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுள்ளார். அந்த தொழில்நுட்பத்தின் செயல்திறனை பிரதமர் மோடிக்கு காட்ட, இஸ்ரேல் நாட்டின் ஒல்கா கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் “கால் மொபைல்” எனப்படும் நடமாடும் நீர்சுத்திகரிப்பு வாகனத்தையும் பார்வையிட்டார்
இந்த வாகனத்திலிருந்து நாளொன்றுக்கு 2௦,௦௦௦ லிட்டர் வரை கடல் நீரை சுத்திகரிக்க முடியும்.
அதேபோல், அதிக மண்ணுடனும் மாசுடனும் இருக்கும் 80,000 லிட்டர் வரை நதி நீரையும் சுத்தப்படுத்த முடியும்.
மேலும் வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலத்தின்போது, பாதுகாப்பான குடிநீர் தேவைப்படும்போது, இந்த சிறப்பு வாகனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.