July 8, 2022 தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி துவங்கப்பட்டு முதல்முறையாக மருத்துவ படிப்பு முடித்த 104 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் கலெக்டர் சமீரன், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி, இ.எஸ்.ஐ மருத்துவகல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலாமற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 34 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 70 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் 10 ஆயிரத்து 425 பேர் மருத்துவப்படிப்பு முடித்து வெளியில் செல்லுகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 50 மாணவர்கள் பயில்கின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஒன்றிய அரசிடம் தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆறு மாவட்டத்திற்கும் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் கிடைக்கப்பெறும் என்றால் இந்தியாவிலேயே மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற லட்சிய கனவு நிறைவேற்றப்படும்.
இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 29 ஆயிரத்து 800 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பி உள்ளனர். இன்று (நேற்று) பட்டபெறும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் கொரோனா பேரிடர் காலங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். 24 மணி நேரமும் போராடி கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய பெருமைக்கு உரியவர்கள்.
கோவை மாவட்டம் மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது. எதிர்காலத்தில் கொரோனா தொற்று வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் விதமாக ஏராளமான படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.