May 20, 2017 தண்டோரா குழு
ஈரோடு ரயில்நிலையத்தில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியல் பிரிவு அதிகாரிகளால் இரவு நேர திடீர் பயணச்சீட்டு பரிசோதனை நடைபெற்றது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியில் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஈரோடு ரயில்நிலையத்தில் நேற்று இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.
சேலம் தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் எம். ராஜேஸ்வரன் தலைமையிலான 16 பேர் கொண்ட வணிகவியல் குழு மற்றும்சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை துணை ஆணையர் சிவதாஸ் தலைமையிலான 15 ரயில்வே பாதுகாப்புப் படையினர் குழு மேற்கொண்ட இந்த திடீர் சோதனையில் 61 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 21,050 ரூபாய் பயணச்சீட்டு தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இந்த பரிசோதனை குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவையும் வணிகவியல் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரையும் பாராட்டினார்.
மேலும்,இது போன்ற சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அவர்களுக்கு ஹரிசங்கர் வர்மா அறிவுறுத்தினார். ரயில் பயணிகளையும் தகுந்த பயணச்சீட்டு பெற்று பயணம் செய்து ரயில்வேக்கு ஒத்துழைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.