ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் 5 FPO-க்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 5 விருதுகளையும், பெருமைமிகு அங்கீகாரங்களையும் பெற்றுள்ளன.
இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவில், கர்நாடகாவின் குடகு பகுதியில் இயங்கி வரும் ‘பொன்னாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு’ சந்தைகள் இணைப்பு பிரிவில் ‘FPO எக்ஸலன்ஸ் விருது’ வழங்கப்பட்டது.
அதே போல கோவை மாவட்டம் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 – 24 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO-க்களில் ஒன்றாக இந்நிறுவனம் அங்கிகரிக்கப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற நபார்டு வங்கியின் 43-வது ஆண்டு விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் இந்த விருதினை வழங்கினார். இந்நிறுவனம் தென்னையை முதன்மை பயிராக கொண்டு, 750 விவசாயிகளோடு கோவை சுல்தான்பேட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
மேலும் கர்நாடகா தும்கூரில் இயங்கி வரும் ‘திப்தூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு’ சிறந்த தரத்திலான உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில் பொருள்களை பேக் செய்து வழங்கி வருதற்கான விருதினை கர்நாடக மாநிலத்தின் ‘வேளாண் உற்பத்தி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம்( KAPPEC)’ கடந்த நவம்பர் 8-ஆம் தேதி வழங்கி கெளரவித்தது.
வேளாண் செய்திகளை பிரத்யேகமாக வெளியிடும் ‘க்ரிஷி ஜாக்ரன்’ பத்திரிக்கையும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலும் (ICAR) இணைந்து நீலகிரி கூடலூர் பகுதியில் இயங்கி வரும் ‘மலநாடு உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு’ Millionaire Farmer of India (MFOI) என்கிற விருதினை வழங்கியுள்ளது.
மேலும் இதே MFOI விருது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இயங்கி வரும் ‘வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும்’ வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2013-ஆம் ஆண்டில் ரூ.45,000 மொத்த விற்பனை கண்ட இந்த நிறுவனம் 21-22 ஆம் நிதியாண்டில் 17 கோடிக்கும் மேல் மொத்த விற்பனை செய்து விவசாயிகளுக்கு பெரும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் டிசம்பர் 2-ஆம் தேதியன்று புதுதில்லியில் ‘க்ரிஷி ஜாக்ரன்’ பத்திரிக்கை மற்றும் ICAR இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் வெகுவாக பாரட்டப்பட்டனர்.
ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, விவசாய விளை பொருட்களை சந்தைப்படுத்துதல், இடுபொருள் விலையை குறைத்தல், மதிப்பு கூட்டுதல், விலை நிர்ணயிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்கி நீடித்த உயர் வருமானம் மற்றும் நிகர லாபத்தை விவசாயிகள் பெற உதவுகிறது.
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 24 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 9000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர், குறிப்பாக இவர்களில் 77% பேர் சிறு-குறு விவசாயிகளாகவும், 18% பேர் பெண் விவசாயிகளாகவும் உள்ளனர். இந்த நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் இதுவரை 143 கோடிக்கும் மேல் ஒட்டுமொத்த வியாபாரம் செய்துள்ளனர்.
மேலும் ஈஷாவின் FPO-க்களில் உறுப்பினர்களாக இருக்கும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இலவச அதிநவீன மண் பரிசோதனை ஆய்வகம் கோவையில் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் மத்தியில் அதிக அளவிலான உர பயன்பாட்டை குறைத்து, மண்ணிற்கு தேவையான உரத்தினை மட்டும் சரியாக தேர்வு செய்து பயன்படுத்தும் நோக்கிலும், படிப்படியாக மண் வளத்தை கூட்டி இயற்கை விவசாயத்தை நோக்கி அவர்களை நகர்த்த உதவும் வகையில் இந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்