December 22, 2024 தண்டோரா குழு
ஈஷா யோக மையத்தில் ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு “சப்தரிஷி ஆரத்தி” நேற்று (டிச.21) சிறப்பாக நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டம் சிவராமபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருமடத்தை சேர்ந்த ஸ்ரீமதே வாயு சித்த ராமானுஞ்ஜதாச ஜீயர் சுவாமிகள் கலந்து கொண்டார்.
இந்த “சப்தரிஷி ஆரத்தி”, சிவன் தன் ஏழு சீடர்களான சப்தரிஷிகளுக்கு, அவரது அருளை பெற கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த ஆன்மீக செயல்முறை. இந்த ஆரத்தி குளிர்கால கதிர்திருப்ப (Winter Solstice) நாளை முன்னிட்டு ஈஷாவில் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஈஷா யோக மையம் குறித்து ஜீயர் சுவாமிகள் கூறியதாவது, “இந்த இடத்தில் சுவாமிகளை தரிசனம் செய்வது பெரும் பாக்கியம், அடியேன் பெருமாள் பக்தர், ஆனால் ஹரியும் ஹரனும் ஒன்று என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த சிவாலயத்திற்கு வந்திருக்கின்றோம்.
ஈஷாவிற்கு வந்து இருப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்று, அந்த சிவனின் பாதங்களில் இருப்பது போல் தான் அடியேனுக்கு இருக்கிறது. இங்கு நடக்கும் ஒவ்வொரு செயல்களும் தனிபட்ட நபரின் செயல்பாட்டில் நடப்பதல்ல. இறைவன் இந்த இடத்தில் இந்த காரியத்தை நடத்துவதற்காக சத்குருவை அனுப்பி ஏற்பாடுகளை செய்து வழி வகுத்து இருக்கிறான்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் கூட சொல்வதை சரியாக கேட்பதில்லை. அனைத்தும் ஒன்றே என்று இவ்வளவு பெரிய அமைப்பை உருவாக்கி இருப்பது தனிபட்ட ஒரு நபர் செய்யக் கூடியது இல்லை. இது இறைவனின் கட்டளை படி சத்குரு அவர்கள் செய்து வருகிறார்கள்.
இங்குள்ள பக்தர்கள் மிகவும் ஆத்மார்த்தமாக தொண்டு செய்கிறார்கள். இப்படி மனப்பூர்வமாக செய்வது மிகவும் சிறப்பானது. இங்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் மிக அற்புதமாக நடைபெறுகிறது. மென்மேலும் இது சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது அடியேனின் ஆசை, இறைவன் நாராயணனும் இதற்கு உறுதுணையாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.
இங்குள்ள ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் தமிழ், சமஸ்கிருதம், நாட்டியம், இசை ஆகியன சொல்லி கொடுக்கப்படுகின்றன. இது வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் சிறப்பாக நடைபெறுகிறது. இது அனைவராலும் முடியாத ஒன்று, தேவலோகத்தில் நடப்பது போல் இங்கு சத்குரு நினைப்பதை சிஷ்யர்கள் செய்கிறார்கள்.” எனக் கூறினார்.
சப்தரிஷி ஆரத்தியில் கலந்து கொண்டது குறித்து அவர் கூறுகையில் “சப்தரிஷி ஆரத்தியில் சிவாச்சாரியார்கள் செய்த பூஜை, அலங்காரம், ஆரத்தி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதனைத் தொடந்து நடைபெற்ற ஆதியோகி திவ்ய தரிசனத்தை எவ்வாறு விவரிப்பது என்று தெரியவில்லை, இது போல் முன்பு நாம் பார்த்தது இல்லை, இதுவே முதல் முறை. நான் ஒரு ஜீயர், இங்கு சிவன் முன்பு அமர வைத்து இருக்கிறாய், உன் திருவிளையாடல் தான் என்ன என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். அந்த அளவிற்கு மிகவும் அற்புதமான ஆனந்தமான காட்சியை காணும் போது நம்மையே மறந்து மெய் சிலிர்த்து போய் விட்டேன்.” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து ஆரத்தி செயல்முறையை துவங்கினர்.
அதனைத் தொடர்ந்து தனித்துவமான மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய ஆரத்தி செயல்முறை அங்கு சக்திவாய்ந்த சூழலை உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை இரவு 08:30 மணி வரை நடைபெற்றது. பிறகு ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.
முன்னதாக கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, அன்னூர் உள்ளிட்ட பகுதில் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் ஈஷாவிற்கு நேற்று வந்திருந்தனர். அவர்கள் சூர்ய குண்ட மண்டபத்தில் தேவாரப் பதிகங்களைப் பாடினர். அவர்களும் மாலை நடைபெற்ற சப்தரிஷி ஆரத்தியில் பங்கேற்றனர். கோவை பைரவ பீடத்தின் சுவாமிகள் கிருஷ்ணமூர்த்தி, வாசு ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சப்தரிஷி ஆரத்தி வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற ‘காசி விஸ்வநாதர் கோவிலில்’ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அதன் புனிதம் மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஈஷாவில் ஆதியோகி முன்புள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு மட்டுமே இந்த சப்தரிஷி ஆரத்தி நடத்தப்படுவது குறிப்பிட்டதக்கது. இது கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் குளிர்கால கதிர்திருப்ப நாளன்று ஈஷாவில் நடத்தப்பட்டு வருகிறது.