February 16, 2023 தண்டோரா குழு
பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு இவ்விழாவிற்காக அவர் முதல்முறையாக தமிழ்நாடு வருவது குறிப்பிடத்தக்கது. அவருடைய வருகையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பு பிப்.18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா கடந்த 28 ஆண்டுகளாக ஈஷாவில் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்ச பூத க்ரியையுடன் தொடங்கும். இதை தொடர்ந்து லிங்க பைரவி தேவி மஹா யாத்திரை நடைபெறும். பின்னர், விழா மேடையில் குடியரசு தலைவர் மற்றும் சத்குரு அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
அதன் பிறகு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மேற்கு வங்கம்,ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெறும். இதற்கிடையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரம்ம முஹூர்த்த காலத்தில் சத்குரு வழிநடத்தும் சக்தி வாய்ந்த தியான நிகழ்வுகளும், சத்சங்கமும் நடைபெறும்.
குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று பக்தர்களை இரவு முழுவதும் விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் வைத்து கொள்ள உள்ளனர். விழாவிற்கும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இரவு முழுவதும் மஹா அன்னதானம் வழங்கப்படும்.
கடந்தாண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ், பிரெஞ்சு உட்பட 21 மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
இதுதவிர, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர், நாகர்கோவில் உட்பட தமிழ்நாட்டில் 32 இடங்களில் நடைபெறும் ஈஷா மஹா சிவராத்திரி கொண்டாட்டங்களில் பொதுமக்கள் இலவசமாக நேரில் பங்கேற்கலாம்.