March 10, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிகளில் உள்ள குளங்களில் உக்கடம் பெரியகுளம் மிகவும் முக்கியமான குளமாக கருதப்படுகிறது. சுமார் 327 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம் 5.60 அடி வரை ஆழம் கொண்டது.
தென்மேற்கு பருவமழை காலங்களில் நொய்யல் ஆற்றில் இருந்து வரும் நீர் மூலம் இக்குளம் முழு கொள்ளளவை எட்டும். கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரியகுளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கி.மீ. தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கி.மீ. தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது.
100 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரியகுளம் திறக்கப்பட்டது. இந்நிலையில் உக்கடம் பெரியகுளத்தில் கோவை மாநகராட்சியின் மூலம் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக ஆய்வு அறிக்கை தயார் செய்யும் பணி விரைவில் துவங்க உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘ உக்கடம் பெரியகுளத்தில் முதல் கட்டமாக சுமார் 50 ஏக்கர் அளவில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக முதல் கட்டமாக வல்லுநர் குழு மூலம் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.அதன் பின் ஆய்வு அறிக்கை தயார் செய்யப்படும். இதில் மிதக்கும் சூரிய சக்தி நிலையம் அமைக்க சாத்திய குறுகள் உள்ளனவா? எவ்வுளவு நீலம், அகலத்தில் அமைக்கலாம், எவ்வுளவு செலவில் அமைக்கலாம், எவ்வுளவு மின்சக்தி பெறலாம், போன்றவைகள் ஆய்வு செய்யப்படும்,’’ என்றார்.