April 11, 2022 தண்டோரா குழு
கோவையில் உக்கடம் மேம்பால பணிக்காக வெட்டப்பட இருந்த 6 மரங்களை மறுநடவு செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
கோவை உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில், உக்கடம் பழைய மீன் சந்தை இருந்த பகுதியில் பாலத்துக்கான இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேம்பால பணி காரணமாக அப்பகுதியில் இருந்த கடைகள், வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் 3 அரச மரங்கள்,ஒரு அத்தி மரம், 2 வேப்ப மரங்களை வெட்டி வேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் அவற்றை வெட்டாமல் மறுநடவு செய்ய தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து மேம்பாலம் அமையும் இடத்தில் உள்ள அந்த 6 மரங்களையும் வேருடன் தோண்டி எடுத்து, வேறு இடத்தில் மறுநடவு செய்யும் பணி நடைபெற்றது. பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள் உதவியுடன் 50 ஆண்டு கால அரச மரம் வேருடன் தோண்டி எடுக்கப்பட்டு அருகேயுள்ள அரசுக்கான இடத்தில் மறுநடவு செய்யப்பட்டது.ஒரு வார காலத்தில் 6 மரங்களையும் மறுநடவு செய்ய தன்னார்வலர்களும், அதிகாரிகளும் திட்டமிட்டுள்ளனர்.