June 20, 2022 தண்டோரா குழு
தற்போது உடல் ஆரோக்கியத்திற்காகவும் பலரும் நடனம் கற்க முன்வருவதாக பிரபல திரைப்பட நடன இயக்குனர் ஸ்ரீதர் கோவையில் தெரிவித்துள்ளார்.
திரைப்பட துறையில்,தமிழ்,ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் பல்வேறு மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர் சென்னையில் ஏ.ஆர்.எஸ்.டான்ஸ் அகாடமி எனும் நடன பயிற்சி மையம் வாயிலாக சிறு வயது முதல் பெரியவர்கள் வரையிலானவர்களுக்கு நடன பயிற்சி அளித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்த படியாக கோவை ஹோப்ஸ் பகுதியில் உள்ள க்ளஸ்டர் மீடியா கல்லூரி வளாகத்தில் தனது ஏ.ஆர்.எஸ்.டான்ஸ் அகாடமியை நடன இயக்குனர் ஸ்ரீதர் துவக்கியுள்ளார்.இதற்கான துவக்க விழாவில் நடன இயக்குனர் ஸ்ரீதர்,அவரது மகள் அக்ஷதா,மற்றும் க்ளஸ்டர் மீடியா கல்லூரி இயக்குனர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய டான்ஸ் அகாடமியை துவக்கி வைத்தனர்.துவக்க விழாவை முன்னிட்டு இலவசமாக நடன பயிற்சியை அளித்த மாஸ்டர் ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர்,
தற்போது உடல் நிலை ஆரோக்கியத்திற்காகவும் பலரும் நடனம் கற்க முன்வருவதாகவும், நடனத்தில் ஆர்வமுடையவர்கள் யார் வேண்டுமானாலும் நடனம் கற்று கொள்ளலாம், என கூறிய அவர்,தற்போது திரைப்பட துறையில் நடன துறைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தார். திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது தனி ஆல்பம் போன்ற தயாரிப்புகளிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.