December 9, 2016 தண்டோரா குழு
நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்களைச் செய்தித் தாள்களில் மடித்துத் தர தடை விதித்து மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரும்பாலும் உணவகங்கள், தள்ளுவண்டிக் கடைகளில் விற்கப்படும் உணவுகள் என அனைத்தும் செய்தித்தாள்களில்தான் மடித்துத் தரப்படுகின்றன.
நட்சத்திர உணவு விடுதிகள், உயர்தர உணவகங்களில் பெரும்பாலும் அவ்வாறு தரப்படுவதில்லை. உடலுக்கு தீங்கு விளைவாக்காத உலோகத் தாள்களில் அதற்கென வடிவமைக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் வைத்துத் தருகின்றனர்.
செய்தித் தாள்களில் அச்சிடுவதற்கு காரீயத்தில் செய்யப்பட்ட மை ஆகும். அதனால், செய்தித்தாளில் மை படிந்து விடும். அதில், உணவுப் பொருட்களைக் கட்டித் தந்தால், தாளில் படிந்திருக்கும் மை உணவுப் பொருட்களுடன் கலந்து நச்சுத் தன்மையை ஏற்படுத்திவிடும் என்று பலத்த புகார் எழுந்தது. இது குறித்து குழு அமைத்து ஆராய்ச்சி மேற்கொண்ட மத்திய உணவுத் துறை அதற்குத் தடை விதித்துவிட்டது.
இது குறித்து மத்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “உணவுப் பொருட்களைச் செய்தித் தாள்களில் மடித்துத் தருவதற்கு, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தித் தாள்களில் உள்ள மையால் உடல் நலத்திற்குக் கேடு ஏற்படும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தடை உத்தரவு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.